கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்:தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் நிறுத்தம்சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது


தினத்தந்தி 30 Sept 2023 12:30 AM IST (Updated: 30 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன. மேலும் எல்லை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன. மேலும் எல்லை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

முழு அடைப்பு போராட்டம்

தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் நேற்று கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்புகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு சங்கங்கள், கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணியுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன. அதேபோல் இரவு 12 மணிக்குள் அனைத்து தமிழக பஸ்களும் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு திரும்பி வந்தன.

பயணிகள் தவிப்பு

இதனால் தொலை தூரத்தில் இருந்து பஸ்களில் பெங்களூரு சென்று கொண்டிருந்த பயணிகள் ஓசூரில் இறக்கி விடப்பட்டதால் அவர்கள் செய்வதறியாது பஸ் நிலையத்தில் தவித்தனர்.

மேலும் சேலம் கோட்டத்தை சேர்ந்த 350 பஸ்கள் மற்றும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 80 பஸ்கள் என மொத்தம் 430 தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன.

தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், கர்நாடக அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வந்து சென்றது. தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பயணம் செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது

ஓசூரில் இருந்து கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளிக்கு வழக்கமாக சென்று வரும் டவுன் பஸ்கள் நேற்று தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அங்கிருந்து அத்திப்பள்ளிக்கு 3 கி.மீ. தூரம் நடந்தும், ஆட்டோக்களிலும் சென்றதை காணமுடிந்தது.

முழு அடைப்பையொட்டி அத்திப்பள்ளியிலும் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் குறைந்து, போக்குவரத்தும் இல்லாததால் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது.

இருமாநில போலீசார் பாதுகாப்பு

இதற்கிடையே அத்திப்பள்ளி வளைவு பகுதியில் பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோல் தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு செல்ல முயன்ற தமிழக பதிவெண் கொண்ட கார், வேன்கள், இருசக்கர வாகனங்களை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் அவற்றை மீண்டும் ஓசூருக்கு திருப்பி அனுப்பினர்.

சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தமிழக எல்லைக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு நிலவரம் குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்திடம் கேட்டறிந்தார்.

சாலை மறியல்

இது ஒருபுறம் இருக்க, நேற்று ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி), கன்னட ஜாக்ருதி வேதிகே, கடிநாடு கன்னட சேனை, புனித் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம், கன்னட சலுவளி வாட்டாள் கட்சி மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக அத்திப்பள்ளியில் இருந்து மாநில தலைவர்கள் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா மற்றும் நாகராஜா தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அவர்களை கர்நாடக அத்திப்பள்ளி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி தயாராக இருந்த பஸ்சில் ஏற்றினர். சாலை மறியலில் ஈடுபட்டதாக 25 பெண்கள் உள்பட 275 பேரை போலீசார் கைது செய்ததால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.


Next Story