பொம்மிடி அருகே நிலத்தகராறில் போலீஸ்காரரை தாக்கிய அண்ணன் கைது
பாப்பிரெட்டிப்பட்டி
பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் பெரியசாமி (வயது 32). இவர் சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1-ந் ்தேதி கால்வலி காரணமாக மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கும், இவருடைய அண்ணன் சக்திவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை பிரித்து கொடுக்க வேண்டி பெரியசாமி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கட்டையால் பெரியசாமியை, சக்திவேல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த பெரியசாமி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.