சட்டவிரோதமாக மதுவிற்ற 20 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை தொடர்பாக செல்போன்கள் மூலம் வரப்பட்ட புகார்களின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் உமா தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் ஒழிப்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் வருவாய் துறை, காவல்துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
சட்டவிரோத மதுபான விற்பனை
கூட்டத்தில் கலெக்டர் உமா பேசியதாவது:-
போலி மதுபானங்கள் விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இந்த பணியை செய்ய வேண்டும். புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட விரோத மதுபானங்கள் விற்பனை தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிற்கு 8838352334 என்ற எண்ணில் நேரடியாகவோ, அல்லது வாட்ஸ்-அப் மூலமோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 43 புகார்கள் வந்துள்ளது.
20 பேர் கைது
அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் உமா கூறினார்.
இந்த கூட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், உதவி ஆணையர் (கலால்) செல்வி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.