பென்னாகரம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 4 பேர் கைது
பென்னாகரம்:
பென்னாகரம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 1 லட்சம் ரூபாயை வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
தீவிர ரோந்து பணி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வன அலுவலர் ராஜ்குமார், வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் மடம் சோதனைச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் முயலை வேட்டையாடி வனப்பகுதியில் சமைத்து கொண்டு இருந்தனர். வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மடம் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 24), பொம்மிடியை சேர்ந்த விஜயகுமார் (23), பிலிகுண்டுலுவை சேர்ந்த சேட்டு (25), நாட்றாம்பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் என தெரிய வந்தது.
கைது-அபராதம்
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.