புரட்டாசி மாத சனிக்கிழமை முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்


புரட்டாசி மாத சனிக்கிழமை முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
x

புரட்டாசி மாத சனிக்கிழமை முடிந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு தங்களுக்கு வேண்டிய மீன்களை வாங்கி சென்றனர்.

சென்னை

பொதுமக்கள் குவிந்தனர்

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானவர்கள், அசைவ உணவை தவிர்த்து, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமைகளும் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. மேலும் இன்றுடன் புரட்டாசி மாதமும் முடிகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சென்னை காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் காசிமேட்டில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

வரத்து அதிகம்

மேலும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒரே நேரத்தில் கரை திரும்பியதால் பெரிய அளவிலான திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு வரத்து அதிகமாக இருந்தது.

மீன் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் மீன்களை அதிகளவில் வாங்கிச்சென்றனர். மீன் பிரியர்களின் படையெடுப்பால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டியது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசிமேட்டில் நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை(கிலோவில்) வருமாறு:-

வஞ்சிரம்-ரூ.600 முதல் ரூ.800 வரை, பெரிய வஞ்சிரம்-ரூ.1000 முதல் ரூ.1500 வரை, வவ்வால்-ரூ.500 முதல் ரூ.600 வரை, சங்கரா-ரூ.200 முதல் ரூ.300 வரை, தோல் பாறை-ரூ.200 முதல் ரூ.600 வரை, நெத்திலி-ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

மேலும் பாறை-ரூ.400, கொடுவா-ரூ.550, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.300, கடம்பா-ரூ.300, இறால்-ரூ.450, நண்டு-ரூ.300, கடல் விரால்-ரூ.400, கிழங்கா-ரூ.350, காளான்-ரூ.600, சுறா-ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story