சென்னை விமான நிலையத்தில் 9½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 9½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள 9½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய பிறகு விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தின் கழிவறையில் இருந்த பெட்டிக்குள் மர்ம பார்சல் இருந்ததை கண்டனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. அதேபோல் பன்னாட்டு முனைய வருகை பகுதியில் உள்ள கழிவறையிலும் ஒரு மர்ம பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கும்பல், அதனை விமான கழிவறை மற்றும் விமான நிலைய கழிவறையில் வீசி சென்றதாக தெரிகிறது.

கழிவறைகளில் இருந்து ரூ.4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த தங்கத்தை கடத்தி வந்து, கழிவறையில் வீசி சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த கோபால்சாமி (வயது 61) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர், சுத்தியல் உள்ளிட்டவைகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் எடை கொண்ட 11 தங்க கம்பிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோபால்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 9 கிலோ 555 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story