தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது தாக்குதல்
சேலம் அழகாபுரத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் மீது தாக்குதல் நடத்திய அவருடைய மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சொர்ணபுரி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). தோல் டாக்டரான இவர், ராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது அழகாபுரத்தில் கனகராஜ் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜான்சியா (39). பல் டாக்டர். இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் அழகாபுரத்தில் உள்ள கனகராஜின் மருத்துவமனைக்கு ஜான்சியா சென்று அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த ஜனனி என்பவர் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் ஜான்சியா தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகாபுரம் போலீசில் கனகராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஜான்சியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.