எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேரிய நபர் மீது தாக்குதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு


எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேரிய நபர் மீது தாக்குதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
x

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய நபர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

சிவகங்கையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய வளாகத்திற்குள் வருவதற்கான பேருந்தில் எடப்பாடி பழனிசாமி வந்து கொண்டிருந்த போது, அவருடன் பயணம் செய்த ராஜேஸ்வரன் என்ற நபர் தனது செல்போனில், எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்வதாக பேஸ்புக் நேரலை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ராஜேஸ்வரன் திடீரென எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசத்தொடங்கியுள்ளார். இதைக் கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், உடனடியாக ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே அங்கிருந்த அ.தி.மு.க.வினர் சிலர் ராஜேஸ்வரனை தாக்கத் தொடங்கினர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் இருப்பது பதிவாகியுள்ளது. ராஜேஸ்வரனை சிலர் சட்டையைப் பிடித்து இழுத்து, அவர் மீது தாக்குதல் நடத்துவதும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

இதையடுத்து விமான நிலைய போலீசார் ராஜேஸ்வரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் மீது எந்த வித புகாரும் கொடுக்கப்படாததால், புகார் கொடுக்கப்படும் பட்சத்தில் விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு ராஜேஸ்வரனை விமான நிலைய போலீசார் விடுவித்துள்ளனர்.

அதே சமயம் ராஜேஸ்வரன் அ.ம.மு.க.வின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story