கரூரில் பட்டியலின மாணவர் மீது ஊருக்குள் சென்று தாக்குதல் - 4 மாணவர்கள் கைது


கரூரில் பட்டியலின மாணவர் மீது ஊருக்குள் சென்று தாக்குதல் - 4 மாணவர்கள் கைது
x

பேருந்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவரை ஊருக்குள் சென்று தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனது பாட்டி கன்னியம்மாள் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்து பேருந்தில் வந்து கொண்டிருந்த போது இவருக்கும், புலியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த நாள் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் ஊருக்குள் சென்று அவரையும் மற்றும் அவரது பாட்டியையும் சில நபர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதில் காயமடைந்த மாணவரும், அவரது பாட்டியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story