சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு


சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு
x

சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க, புறப்பட 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் தூரமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்கி, பின்னர் புறப்பட்டு செல்கின்றன. 2-வது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையத்தின் முதல் ஓடுபாதை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தற்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை மற்றும் பராமரிப்பு நடக்கும் போது 2-வது ஓடுபாதையை பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. முதல் பிரதான ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு என இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக சென்னை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடிந்ததும் முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தவும், அதன் பின்பு நிரந்தரமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது பிரதான முதல் ஓடுபாதையில் ஒரு மணி நேரத்தில் 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது 50-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story