காஞ்சிபுரம்: 12 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை... போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது


காஞ்சிபுரம்: 12 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை... போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
x

காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரயில்வே சாலையில் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த பெண் தந்தையுடனும், இளைய பெண் தாயுடனும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தந்தையுடன் வசித்து வந்த 12 வயதான மூத்த பெண், கொரோனா காலகட்டத்தில் பழக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பழனி மகன் ரஞ்சித் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை சிறுமியை அழைத்துக் கொண்டுபோய், தாயிடம் விட்டுவிட்டார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு வயிற்றின் மேல் பகுதியில் மேடாக இருந்ததால் அதனை கட்டி என்று கருதி சிறுமியின் தாய் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ரஞ்சித்தை கைது செய்தனர்.

மேலும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.


Next Story