போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை


போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Sep 2023 8:45 AM GMT (Updated: 27 Sep 2023 10:23 AM GMT)

போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு விட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் மீது போரூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தது. இவருக்கு ஆதிலட்சுமி, லீலாவதி என 2 மனைவிகள் உள்ளனர். ஆதிலட்சுமிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்னர். லீலாவதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வந்த லீலாவதி, ரூபன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ரூபன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தன் மீது அளித்திருந்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்த அம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை அவதூறாக மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசுகிறார். தன் மீதுள்ள பழைய வழக்குகள் எல்லாம் எடுத்து தன்னை மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டுமென அழுதபடி வீடியோ பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில்:-

ரூபன் மீது பல்வேறு வழக்குகள் போரூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பிரச்சினைக்கும் செல்லாமல் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் கடந்த 2019-ம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 2 ஆட்டோக்களை வாங்கியதாகவும் அதற்கு பாதி பணம் கொடுத்த நிலையில் மீதி ரூ.3 லட்சம் வரை கொடுக்க வேண்டி இருந்ததாக தெரிகிறது.

தற்போது ஆட்டோவை விற்ற நபர் பணத்தை பெற்று தருமாறு அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணைக்கு அம்பத்தூர் போலீஸ் நிலையம் சென்ற ரூபன் வாங்கிய 2 ஆட்டோக்களில் ஒரு ஆட்டோவை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு 24-ந்தேதி விசாரணைக்கு வருவதாக தெரிவித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணைக்கு வர வேண்டும் என ரூபனை செல்போனில் அழைத்து பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரூபன் வீடியோ பதிவிட்டு விட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவரது 2 மனைவிகள் கூறுகையில்:-

பணம் கொடுத்து ஆட்டோவை எடுத்து வந்த நிலையில் பணத்தை பாதி கொடுத்த பிறகு மற்ற தொகையை சிறிது, சிறிதாக கொடுத்ததாகவும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாத நிலையில் அவரை பழிவாங்கும் நோக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டும் தொனியில் பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து போலீசாரும், ஆர்.டி.ஓவும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story