விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி


விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
x

விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

திருச்சி

*திருச்சி மேலப்புதூர் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 59). ஆட்டோ டிரைவரான இவர் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இதில், படுகாயம் அடைந்த ரவி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் பறித்த 2 பேர் கைது

*பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்தவர் குருசாமி (32). இவர் நேற்று முன்தினம் காலை காஜாப்பேட்டை பகுதியில் உள்ள பொதுகழிவறை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.900-ஐ பறித்து சென்ற முதலியார்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (25), திருவெறும்பூர் அரசங்குடியை சேர்ந்த குணா (46) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

*மணப்பாறையை அடுத்த சின்ன உடையாபட்டியை சேர்ந்த பழனியம்மாள் (77) என்பவர் ஊருக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையத்தில் நின்றபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒயர்களை திருடியவர் கைது

*திருச்சி தீரன்நகரில் உள்ள மருந்துக் கடையின் பின்புறம் பொருத்தப்பட்டு இருந்த ஏ.சி.யில் இருந்து ஒயர்களை திருடியதாக தாராநல்லூரை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவரை திருச்சி செசன்ஸ்கோர்ட்டு போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியையிடம் திருட்டு

*லால்குடி அடுத்த செம்பரை தெற்கு தெருவை சேர்ந்த ஆசிரியை ஜெயபாரதி (33). இவர் நேற்று காலை வழக்கம்போல் திருச்சியில் தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் மீது போக்சோவில் வழக்கு

*திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார். இவர் பயிற்சிக்கு வந்த சிறுமிகள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் வந்தது. அதன்பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story