கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை மும்முரம்


கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 22 Oct 2023 9:21 AM GMT (Updated: 22 Oct 2023 11:15 AM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றது.

போரூர்,

ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது இதையொட்டி அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

ஆண்டு தோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த ஆண்டு சிறப்பு சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை மாறாக சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18ந் தேதி அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு சந்தையில் 100க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல்,பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வாழைக்கன்று விற்பனைக்கு வந்துள்ளது இவை அனைத்தும் கோயம்பேடு மார்கெட்டை ஒட்டியுள்ள "இ மற்றும் ஏ" சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறும்போது:- அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ1,000வசூல் செய்து வருகின்றனர் ஆனால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் நேரடியாக வியாபாரிகள் பலர் தற்காலிக கடைகள் அமைத்தும் வாகனங்களில் வைத்தும் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அவல்,பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

பூஜை பொருட்கள் விலை விபரம் வருமாறு :- ஆப்பிள்-ரூ200, சாத்துக்குடி-ரூ100, மாலூர் கொய்யா-ரூ150, மாதுளம் பழம்-ரூ250, அவல் ஒரு படி (பெரியது) -ரூ100, பொரி ஒரு படி-ரூ20, கடலை ஒரு படி-ரூ150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ-ரூ100, தேங்காய் ஒன்று-ரூ20-ரூ25வரை, வாழை இலை ஒன்று-ரூ10, வாழைகன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ100, பூசணிக்காய் (1கிலோ)-ரூ10, எழுமிச்சை கிலோ ரூ120, தோரணம் (20எண்ணிக்கை) -ரூ50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ15, வெற்றிலை கவுளி(80 எண்ணிக்கை)-ரூ40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று- ரூ500.

ஆந்திரா, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 80க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது. மார்கெட்டில் உள்ள கடைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ-200-க்கும், பன்னீர் ரோஜா ஒரு கிலோ-ரூ150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ250-க்கும், மல்லி மற்றும் கனகாம்பரம் ஒரு கிலோ ரூ900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு மார்கெட்டில் பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):- சாமந்தி-ரூ150-ரூ200வரை, பன்னீர் ரோஜா-ரூ120-ரூ150வரை, சாக்லேட் ரோஜா-ரூ200-ரூ250வரை, ஜாதி-ரூ450, முல்லை-ரூ600, மல்லி-ரூ700-ரூ900வரை. அரளி-ரூ500, கனகாம்பரம்-ரூ900, சம்பங்கி-ரூ250-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story