காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா


காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா
x

காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா நடந்தது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகே பாலாற்றங்கரையில் நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி பாலாறு ஆரத்தி விழா நடைபெற்றது. அகில இந்திய சன்னியாசிகள் சங்கம், பாலாறு பாதுகாப்பு இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இணைந்து காஞ்சீபுரம் ஓரிக்கை மகா பெரியவர் சுவாமிகள் மணிமண்டபம் அருகில் பாலாற்றங்கரையில் பாலாறு ஆரத்தி விழாவை துறவிகள் கொண்டாடினார்கள்.

விழாவுக்கு சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமை வகித்து பாலாறு அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர் சன்னியாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாலாற்றுக்கு சிறப்பு தீபாராதனைகளை செய்தனர்.

விழாவுக்கு உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவானந்த், சஞ்சீவி மடத்தின் நிர்வாகி அனுமன் மாதாஜி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம், பாலாறு பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்னியாசிகள் சங்க இணைச் செயலாளர் சிவராமானந்தா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாநகர பா.ஜ.க. மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் உள்பட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு பாலாறு அம்மனை தரிசித்தனர்.

சுவாமி ராமானந்தா மகராஜ் இது குறித்து கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும், நதிகள் மாசுபடுவதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் சுத்தமான தண்ணீர் பெறுவது சிரமமாக உள்ளது. நதிகளில் கழிவு நீர் செல்வதை தடுப்பது, குப்பைகளை கொட்டுவது, புனித தலங்களில் பரிகாரம் என்ற பெயரில் அணிந்திருக்கும் துணிகளை போடுவது போன்றவற்றில் இருந்து நதிகளைப் பாதுகாக்கவும், மாசடையாமல் இருக்கவும் சன்னியாசிகள் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நதிகளை தெய்வங்களாக கருதி அவை ஒவ்வொன்றுக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டு நதிக்கரையோரங்களில் மக்களை திரட்டி அந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து நதிகளை வழிபட்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் 800 இடங்களில் நதிகளை பாதுகாக்க ஆரத்தி விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தென்பாரத கும்பமேளா கும்பகோணத்தில் நடத்தப்பட்டது. ஆரத்தி விழா நடத்தப்படும் இடங்கள் அனைத்திலும் ரதயாத்திரை, பாதயாத்திரை போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்தியாவின் பிரதான நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்திரா, காலடி, பண்டரிபுரம் போன்ற இடங்களிலும் ஆரத்தி விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை குற்றாலம் பிரதான அருவி அருகில் உள்ள சித்ரா நதிக்கரையோரத்தில் ஆரத்தி விழா நடைபெறவுள்ளது.

விழா நடைபெறும் 3 நாட்களும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 25-ந்தேதி முதல் 31 -ந்தேதி தேதி வரை கோவை பேரூராதீன மடத்தில் நொய்யல் நதிக்கான விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story