பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை


பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஐகோபால் மீதான போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு தடை
x

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு மட்டும் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபால், மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து 8 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தனித்தனி விசாரணை

இந்த 8 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்காமல், தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று போக்சோ சிறப்பு கோர்ட்டில் ராஜகோபால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அதில், 8 வழக்குகளில் 5 வழக்குகள் காலம் கடந்து புகார் செய்யப்பட்டுள்ளது. அதாவது 5 ஆண்டுகளுக்கு பின்னர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டப்பிரிவு 12-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 'அதிகபட்ச தண்டனையே 3 ஆண்டுகள் தான். அதனால், 8 வழக்குகளும் தனித்தனியாக விசாரித்தால், அந்த 5 வழக்குகளில் இருந்து என்னை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறமுடியும்' என்று கூறியிருந்தார்.

அட்டவணை

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஒரேவிதமான குற்றச்செயல் என்பதால், அத்தனை வழக்குகளையும் ஒன்றாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.- மனுதாரர் மீது பதிவான 8 போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்ட மாணவிகள் எப்போது புகார் செய்தனர்? குற்றச்சம்பவம் எப்போது நடந்தது? எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டன? என்பது உள்ளிட்ட விவரங்களை அட்டவணையாக போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.

தடை

இதற்காக விசாரணையை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை, மனுதாரர் ராஜகோபாலுக்கு எதிரான வழக்குகளில் சாட்சி விசாரணைக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story