சென்னை மாநகராட்சியில் மேலும் 3 இடங்களில் உயிரி எரிவாயு மையம் - கமிஷனர் ககன்தீப் சிங் தகவல்


சென்னை மாநகராட்சியில் மேலும் 3 இடங்களில் உயிரி எரிவாயு மையம் - கமிஷனர் ககன்தீப் சிங் தகவல்
x

சென்னை மாநகராட்சியில் மேலும் 3 இடங்களில் உயிரி எரிவாயு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கமிஷனர் ககன்தீப் சிங் கூறினார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு பகுதியில் உயிரி எரிவாயு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பைகளின் ஈரக்கழிவுகள் மூலம் உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதேபோல் கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் 3 இடங்களில் உயிரி எரிவாயு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரி எரிவாயு மையங்களில் குப்பைகளை அனுப்பும்போது அவை முறையாக தரம்பிரித்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் இந்த உயிரி எரிவாயு மையங்களின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குப்பைகளை வாங்கும்போது அவற்றை தரம் பிரித்து வழங்க பரப்புரையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த எடுத்துக்காட்டுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சிறப்பாக பணிபுரியும் பரப்புரையாளர்களுக்கு மாதம் தோறும் விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story