அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம் - சாலை மறியல்


அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம் - சாலை மறியல்
x

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து சென்னை வடபழனியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை,

நெய்வேலி என்.எல்.சி. நிலையத்துக்குள் செல்ல முயன்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வடபழனியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ரா.அருள் எம்.எல்.ஏ., தர்மபுரி மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாநில தேர்தல் பணி குழு செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆலப்பாக்கம் சேகர் தலைமையில் வானகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உள்பட அக்கட்சியினர் போரூர் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமையில் துணை செயலாளர்கள் பூக்கடை முனுசாமி, குமார் உள்பட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஆர்.கே.கோபிநாத் தலைமையில் கே.பி.பாண்டுரங்கன் முன்னிலையில் கொரட்டூர் பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் மாவட்ட செயலாளர் ஜி.வி. சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரை பெரவள்ளூர் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story