'மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க. முயலவில்லை' - சீமான் விமர்சனம்
பா.ஜ.க. அரசு கலவரத்தை விரும்புவதால் மணிப்பூரில் கலவரம் நடக்கிறது என்று சீமான் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது;-
"மணிப்பூரில் இருந்து வீடியோ வெளியான போது, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பைரன் சிங் இது போல பல சம்பவங்கள் அங்கு நடந்துள்ளதாகவும், அதற்காகவே இணையத்தை முடக்கியதாகவும் கூறுகிறார். கலவரத்தை கட்டுப்படுத்த இவர்கள் முயற்சி செய்யவில்லை. அது வெளியில் தெரியாமல் இருக்க இணையத்தை முடக்கியதாக கூறுவது மிகப்பெரிய கொடுமை.
வலிமைமிக்க காவல் படைகளை வைத்திருக்கும் மாநில அரசு, இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு, அரை மணி நேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தி இருதரப்பு மக்களிடமும் பேசி சுமூகமான தீர்வை எட்டியிருக்க முடியாதா? மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு கலவரத்தை விரும்புவதால், அங்கு கலவரம் நடக்கிறது" என்று சீமான் விமர்சித்துள்ளார்.