தாம்பரத்தில் பா.ஜ.க. கொடி கம்பத்தை அகற்றிய விவகாரம் - காவல்துறை விளக்கம்


தாம்பரத்தில் பா.ஜ.க. கொடி கம்பத்தை அகற்றிய விவகாரம் - காவல்துறை விளக்கம்
x

தாம்பரத்தில் பா.ஜ.க. கொடி கம்பத்தை அகற்றிய விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் இல்லத்துக்கு அருகில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை பா.ஜ.க.வினர் நட்டு வைத்தனர். இந்த கொடி கம்பம் ஆபத்தான நிலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜே.சி.பி. உடன் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கொடி கம்பத்தை அகற்ற விடாமல் ஜே.சி.பி.யின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போலீசார் பா.ஜ.க.வினரை குண்டுகட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர். இதனை அகற்றும் போது பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், மாநாகராட்சியில் முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொடி கம்பம் வைக்கப்பட்டிருந்ததாகவும், மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை உடைத்த காரணத்திற்காக பா.ஜ.க.வினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story