இந்தியா முழுக்க போதை பொருள் பரவலுக்கு பாஜ.க.தான் காரணம் - ஆர்.எஸ்.பாரதி தாக்கு
அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார் என்று தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
கடலூர்,
தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடலுாரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதார பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார், இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான்.இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நகராட்சித் தேர்தலுக்கு வருவது போல பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்." என்றார்.