ஸ்ரீமுஷ்ணத்தில்மனைவி, மகள் பா.ஜ.க. உறுப்பினரானதாக வந்த குறுஞ்செய்தியால் தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சிபோலீஸ் நிலையத்தில் இருகட்சியினரும் திரண்டதால் பரபரப்பு


ஸ்ரீமுஷ்ணத்தில்மனைவி, மகள் பா.ஜ.க. உறுப்பினரானதாக வந்த குறுஞ்செய்தியால் தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சிபோலீஸ் நிலையத்தில் இருகட்சியினரும் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவி, மகள் பா.ஜ.க. உறுப்பினரானதாக கூறி வந்த குறுஞ்செய்தியால் தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இருகட்சியினரும் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீழவன்னியர் தெரு பகுதிக்கு நேற்று வெளியூரை சேர்ந்த பா.ஜ.க.வினர் 6 பேரை கொண்ட குழுவினர் காரில் வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சேர்ந்து, பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரைக்கும் பயன்பெறும் வசதிகள் குறித்தும், அதில் உறுப்பினராக சேர்பவர்களுக்கு அடையாள அட்டை வாங்கி தருகிறோம் என்றும் அங்குள்ளவர்களிடம் தெரிவித்தனர்.

இதற்காக ரேஷன் கார்டு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் உரிய ஆவணங்களுடன் தங்களை மருத்துவ திட்டத்தில் சேர்க்குமாறு கூறி, அவர்களை சென்று சந்தித்தனர்.

மிஸ்டுகால் கொடுத்தனர்

அப்போது, காரில் வந்திருந்தவர்கள் தாங்கள் எடுத்து வந்த மடிக்கணினியில், பொதுமக்கள் எடுத்து வந்த ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.

அவ்வாறு, கொடுத்தவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு, பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், மருத்துவகாப்பீடு திட்டத்தில் இணைவதற்காக வந்தவர்கள் மிஸ்டுகால் கொடுத்து சென்றனர்.

தி.மு.க. பிரமுகருக்கு அதிர்ச்சி

இந்த சூழ்நிலையில், தி.மு.க. 4-வது வார்டு செயலாளர் ராஜசேகரின் மனைவியும், மகளும் அந்த முகாமில் பங்கேற்று, மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான ஆவணங்களை கொடுத்துவிட்டு, அவர்கள் தெரிவித்தபடி ஒரு செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகாலும் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களது செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில், நீங்கள் பா.ஜ.க.வில் உறுப்பினராக இணைந்ததற்கு வாழ்த்துக்கள் என்று கூறி ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்திருந்தது. இதை பார்த்த ராஜசேகர் ஆத்திரமடைந்தார். உடன் தனது கட்சி நிர்வாகிகளிடம் இதுபற்றி தெரிவித்து, பா.ஜ.க.வினர் மறைமுகமான முறையில் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

போலீஸ் நிலையத்தில் திரண்டனர்

உடன் தி.மு.க. நிர்வாகிகள் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று புகார் செய்தனர். இதை தொடர்ந்து பா.ஜ.க.வினரும் போலீஸ் நிலையத்துக்கு வர தொடங்கினர்கள். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதன்பின்னர் நடந்த பிரச்சினை குறித்து, இன்ஸ்பெக்டர் வீரமணி, பா.ஜ.க.வினரிடம விசாரித்தார். அப்போது, அவர்கள், நாங்கள் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தான் பயனாளிகளை சேர்த்தோம். யாரேனும் விருப்பம் இருப்பவர்கள் உறுப்பினர்களாக சேரலாம் என்று தெரிவித்தன் பேரில், அவர்கள் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர் என்று தெரிவித்தனர்.

விண்ணப்ப படிவத்தில் சர்ச்சை

அப்போது, தி.மு.க. நிர்வாகிகள் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைப்பதற்கு எதற்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு் திட்டத்துக்கான விண்ணப்ப படிவத்தை வினியோகம் செய்தீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பா.ஜ.க.வினர் அந்த விண்ணப்பபடிவத்திலேயே உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை பெற்று, ஆன்லைன் மூலமாக பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளை சேர்த்ததாக தெரிவித்தனர். இவ்வாறாக இரு கட்சி நிர்வாகிகளும் மாறிமாறி கேள்விகளை கேட்டுக்கொண்டதால், அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும், எனவே அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story