பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் - திடீர் கடிதத்தால் பரபரப்பு


பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் - திடீர் கடிதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 May 2022 10:22 AM GMT (Updated: 26 May 2022 2:32 PM GMT)

பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் சேலத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

சேலம்,

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சேலம் தலைமை தபால் நிலையத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலிருந்து ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story