தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்


தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
x

கோப்புப்படம் 

இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டம் கொண்டுவர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சியில் திருவெரும்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது.

இன்று இதுவரையில் தமிழகம் முழுவதும் 3 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியானது இன்று ஏழு மணி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆய்வு பணியில் ஈடுபட இருக்கிறோம். பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடாதவர்களை தேடி கண்டுபிடித்து போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முதலில் தொய்வு ஏற்பட்டது. இதற்காக தற்போது மறுபடியும் அதிக விழிப்புணர்வு செய்து வருகிறோம். பொருளாதாரம் முடங்காமல் இருக்க தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள்.

இன்னும் 10 நாட்களில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல தகவல் அறிவிக்கப்படும். நாமக்கல் சித்த மருத்துவ கல்லூரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்த பல்கலைக்கழகங்கள் சென்னையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனைகள் சரி செய்யப்படும்.

நோயாளிகள் தற்போது எங்கேயும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக 89 ஆயிரத்து 55 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், கோட்டத் தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், கே.கே.கே.கார்த்திக், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story