திருத்தணி அருகே மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை


திருத்தணி அருகே மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை
x

திருத்தணி அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் பஞ்சாயத்து, பி.சி.எண்.கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பத்மநாபன். இவரது மனைவி பங்காரும்மா (வயது 64). பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். பி.சி.எண்.கண்டிகை கிராமத்தில் பங்காரும்மாவும், 95 வயதுடைய அவரது மாமியார் மட்டும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கிராமத்திலிருந்து பங்காரும்மா காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அப்போது அதில் இருந்த 20 பவுன் நகை, 5 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருத்தணி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்த நிலையில், போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பங்காரும்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கொள்ளை கும்பல் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என குற்றப்பிரிவு போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


Next Story