காலை உணவுத் திட்டம்: உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


காலை உணவுத் திட்டம்: உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 Aug 2023 10:56 AM GMT (Updated: 25 Aug 2023 11:00 AM GMT)

உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

முதல்-அமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' தமிழ்நாடு முழுவதும் 31,008 அரசு பள்ளிகளில் இன்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இன்று தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

இதே போல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார். மேலும் பள்ளிகளின் தலைமை செயலாளர்கள் காலை உணவுத் திட்டம் குறித்து மொபைல் செயலி மூலம் தொடர்ந்து கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story