புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான லஞ்ச புகார் - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக சட்டத்திருத்தத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குவதற்காக மனிதவள மேம்பாட்டு மையத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக போலி ரசீதுகள் தயாரித்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஹரிஹரன் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஹரிஹரன் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும், இது சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி வழக்கு தொடர்வதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியதாகவும், விசாரணைக்கு அனுமதி மறுத்து புதுச்சேரி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பொய் புகார்களில் இருந்து அதிகாரிகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை, ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி, இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.