கல்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கல்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

கல்பாக்கத்தில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த பல்லவன் நகரில் வசிப்பவர் பாக்யராஜ் (வயது 44). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியிடம் பணிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது ஞாபக மறதியில் வீட்டின் பிரதான கதவை அடைக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனை மறைந்து இருந்து நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டினுள் நுழைந்துள்ளனர். அப்போது பாக்யராஜின் மனைவி அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததைப் பார்த்த மர்ம நபர்கள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அறையின் கதவை வெளிப்பக்கம் மூடிவிட்டு, பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகை, 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், அருகில் உள்ள 2 வீடுகளில் சங்கிலித்தொடர் போல் அதே மர்மநபர்கள் அடுத்தடுத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒரு வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர்கள், மற்றொரு வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால், அதிலும் ஏமாற்றமடைந்து திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற கல்பாக்கம் போலீசார், திருட்டு நடைபெற்ற வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு, 2 வீட்டில் திருட்டு முயற்சி ஆகிய சம்பவங்களால் கல்பாக்கத்தில் பொதுமக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு-பகல் நேரத்தில் போலீசார் இப்பகுதியில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story