நெருங்கும் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி மும்முரம்


நெருங்கும் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி மும்முரம்
x

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க.சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட உடனே வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றும் வாக்குச்சாவடி முன்பு ஒட்டும் வேட்பாளர்கள் போட்டோ முகவரி மற்றும் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்தலில் 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 78 பெயர், சின்னங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் வி.வி.பேட் எந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த பணி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். பின்னர் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான 26-ந்தேதி காலை 11 மணி முதல் அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.


Next Story