தெருவிளக்குகள் எரியாததால் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு- மதுரை மாநகராட்சி வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
தெருவிளக்குகள் எரியாததால் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை மாநகராட்சி வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை கலைநகர் முதல் தெருவைச் சேர்ந்தவா் பிரேம் மேஷாக். இவருடைய மனைவி ஷைனி மேஷாக். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் எனது மகளுடன் கடந்த 7.1.2022 அன்று இரவு 8 மணியளவில் காரில் சென்றேன். அப்போது மதுரை பீ.பீ.குளம் உழவர் சந்தையின் அருகில் சென்றபோது, தெருவிளக்குகள் எரியாததால், இருட்டாக இருந்தது. சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளும் கூட கண்ணுக்கு தெரியவில்லை. இதன் விளைவாக என்னுடைய கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் எங்கள் கார் சேதமடைந்தது. அது மட்டுமின்றி எனக்கும் காயங்கள் ஏற்பட்டன.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், சாலையோரங்களில் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்காததாலும் எங்கள் கார் விபத்தில் சிக்கியது. என்னை போன்ற பலர், இருட்டிலேயே சாலைகளில் பயணிக்கும் நிலை உள்ளது. இதற்கு காரணமான மதுரை மாநகராட்சி நிர்வாகம், உரிய இழப்பீட்டை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நுகர்வோர் கோர்ட்டின் தலைவர் பாரி, உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகார் தொடர்பான ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவில், சாலையில் தெரு விளக்குகள் எரியாததால் தடுப்பில் கார் மோதி மனுதாரர் பாதிக்கப்பட்டு உள்ளார். இது, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் சேவை குறைபாடு ஆகும். எனவே மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக மதுரை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.