கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று மாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவையில் கார் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று மாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மத்திய தொழிற்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து அனுமதிக்கின்றனர். கார் பார்க்கிங் பகுதியில் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அவர்களது உடைமைகளை வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறையில் இருப்பவர்களும் உடனே பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனா். மறுஉத்தரவு வரும் வரை சென்னை விமான நிலையத்தில் இந்த சோதனைகளும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடரும் என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.