ஆலை உரிமையாளர்-மனைவி மீது வழக்குப்பதிவு


ஆலை உரிமையாளர்-மனைவி மீது வழக்குப்பதிவு
x

சிவகாசி அருகே வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர், அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதிரி வெடிகளை வெடித்தவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட மங்களம் கிராமம் ரெங்கபாளையத்தில் திருத்தங்கல் கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மற்றும் கடை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டாசு வியாபாரத்தின் போது மாதிரி பட்டாசுகள் பற்ற வைத்து வெடித்து பார்த்தபோது அதில் ஒரு பட்டாசு கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசு கடை, ஆலை மற்றும் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டாசு கடையின் பின்புறம் கிப்ட் பாக்ஸ் தயார் செய்து கொண்டிருந்த மகாதேவி, பஞ்சவர்ணம் உள்பட 12 பெண்களும், பாலமுருகன் என்பவரும் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிச்சந்திரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி (43), இவருடைய மனைவி காளீஸ்வரி, மேலாளர் கனகு, மாதிரி பட்டாசுகளை பற்ற வைத்து வெடித்த ராம்குமார், ஜெயமுருகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் சுந்தரமூர்த்தி, கனகு, ராம்குமார், ஜெயமுருகன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் 4 பேரை கைது செய்ததை உறுதிப்படுத்தவில்லை.


Next Story