தமிழ்நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு: அதிமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - ஈபிஎஸ்
தமிழ்நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது, தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
காவேரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டவரப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
தூங்கிக் கொண்டிருந்த, காலங்கடந்து எதிர்ப்பு தெரிவித்த விடியா திமுக அரசின் கவனத்தை, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்ததுடன், நாடாளுமன்றத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கவன ஈர்ப்பு கொண்டுவந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சர், தமிழ் நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக அறிவித்தது.
தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.