காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு


காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு
x

காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம், திருவெள்ளைவாயல், அத்தமஞ்சேரி ரெட்டிபாளையம், வேலூர், வயலூர் காணியம்பாக்கம் உள்பட பல்வேறு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார வளாகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு நிதியில் மூலம் கட்டிடங்கள் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சம்பந்தப்பட்ட நோய் பிரிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதார குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மத்திய ஆய்வு குழுவை சார்ந்த மணிப்பூர் மாநிலம் சேனாபதி பகுதியில் உள்ள சீனியர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆவர்லூயிகாம், மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி தலைமை உதவி இயக்குனர் டாக்டர் அர்ச்சனா சந்திரகாந்த் பாண்டேஜ் ஆகியோர் நோயாளிகள் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய வட்டார தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பராமரிப்பாளர்களையும் கேட்டு அறிந்த நிலையில் பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.

கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து தேசிய தரச்சான்று வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதார ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.


Next Story