தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மீது நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் தமிழ்நாட்டில் 45 இடங்களில் கனமழையும் (11 செ.மீ. வரை), 8 இடங்களில் மிக கனமழையும் (20 செ.மீ. வரை) பெய்து இருக்கிறது. இதுதவிர 2 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்) பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மீது நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது கேரள பகுதிகளின் மீது நிலவுவதாகவும், இதன் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்றும் (24-11-2023), நாளையும் (25-11-2023) பரவலாக அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், அதற்கு மறுநாள் (திங்கட்கிழமை) வலுப்பெற்று தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக நிலவ வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Next Story