தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்தது..
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதே போல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.