சென்னை பாண்டி பஜார் நடைபாதை 'பிரீமியம் பார்க்கிங்'ஆக மாற்றம்
பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை ‘பிரீமியம் பார்க்கிங்’ஆக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராய நகரில், பாண்டி பஜார் நடைபாதை வளாகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டத்தையும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
அதன்படி இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை 'பிரீமியம் பார்க்கிங்'ஆக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனால் இனி ஒரு மணி நேரத்திற்கு இரு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.