கோவையில் கார் வெடித்த வழக்கில் கைதான 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


கோவையில் கார் வெடித்த வழக்கில் கைதான 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x

கோவையில் கார் வெடித்த வழக்கில் கைதான 7 பேர் மீது பூந்தமல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சென்னை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு சிறப்பு (என்.ஐ.ஏ.) போலீசார், இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதானவர்களை என்.ஐ.ஏ. போலீசார், காவலில் எடுத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, வழக்கிற்கு வேண்டிய தடயங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கில் கைதான முகமது அசாருதீன், முகமது தல்கா, பைரோஸ், முகமது ரியாஸ், நவாஸ், அப்சர் கான் மற்றும் இறந்து போன ஜமேசா முபீன் ஆகிய 7 பேர் மீதும் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி இளவழகன் முன்பு முதல் கட்டமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் மீதம் உள்ள 5 பேரை 4-வது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன் மீது இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அவர்களின் போலீஸ் காவல் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story