தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை - சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்


தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை - சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
x

தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து கூறியதாவது:-

"தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

இதுபோன்ற சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்-அமைச்சர் என்னை கண்டித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறினார்.


Next Story