பிரதமர் மோடி சென்னை வருகை: சமூகவலைதள கருத்துக்கள் கண்காணிப்பா? காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதில்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நாளை தொடங்க உள்ளது.
ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான இரண்டு மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 30 பேரும் அடங்குவர்.
செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் போட்டிகள் எதுவும் கிடையாது. 29-ந்தேதியில் இருந்து போட்டிகள் நடைபெறும்.
செஸ் ஒலிம்பியாடி போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று இரவு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதில் அளித்தார்.
அப்போது, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்? இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுத்துள்ளீர்கள்? எதேனும் அமைப்புகள் சார்ந்தவர்களுக்கு எதிராக குறிப்பிட்டு ஏதேனும் கைது நடவடிக்கைகள் எடுக்க உள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், இதில் வர வர எதுபோன்ற இயக்கங்கள் உள்ளன, வருகைக்கு (பிரதமர் மோடியின் சென்னை வருகை) எதிராக எந்த வார்த்தை உள்ளது, முயற்சி உள்ளது என்பதற்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுப்போம். அதேபோல், சமூகவலைதளங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கருத்துக்களை கண்காணித்து வருகிறோம்' என்றார்.