சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு


சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
x

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் சமீபத்தில் பலியானான்.

இதேபோல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்தார்.

நாள்தோறும் சராசரியாக 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில், சென்னையிலும் அதன் தாக்கம் அதிகரித்தது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று டெங்கு கட்டுப்பாடு குறித்து ஆலோசனைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கி வந்தார்.

இந்தநிலையில் சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ராதாகிருஷ்ணன் ஓய்வெடுத்து வருகிறார். வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Next Story