சென்னை ஐகோர்ட்டு நாளை வழக்கம்போல் செயல்படும் - பதிவுத்துறை அறிவிப்பு


சென்னை ஐகோர்ட்டு நாளை வழக்கம்போல் செயல்படும் - பதிவுத்துறை அறிவிப்பு
x

கோப்புப்படம்

வழக்கறிஞர்கள் ஆஜராக இயலாவிட்டால் எதிர்மறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து 4 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நாளை வழக்கம்போல் செயல்படும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணை நாளை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மழையால் வழக்கறிஞர், மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்றாலும் அவர்களுக்கு பாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் நீதிமன்றங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story