சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 4 Nov 2022 11:19 AM IST (Updated: 4 Nov 2022 11:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் மருத்துவ முகாம்களை அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை

தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும்.

கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது. முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.

வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது. கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.

மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்... செய்கிறோம்... என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை. 10 ஆண்டுகாலம் ஆட்சியில அவங்க வேலை செஞ்சு இருந்தா போன வருசம் எப்படி இவ்வளவு தண்ணீர் சென்னையை பாதிச்சு இருக்கும். அதிமுக எந்த பணியும் செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது. திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story