'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியை வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


சென்னை சங்கமம் நிகழ்ச்சியை  வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x

10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை சங்கமம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ''சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா-2023'' நிகழ்ச்சி தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை சங்கமம் நிகழ்ச்சி புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வருகிற 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. 'சென்னை சங்கமம்-இது நம்ம ஊர் திருவிழா' நாட்டுப்புற கலைநிகழ்ச்சி கனிமொழி எம்.பி.யின் ஒருங்கிணைப்பில் மிளிர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதாவது மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

பாரம்பரிய, நாட்டுப்புற கலைஞர்கள் நமது கலைகளை அடையாளப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும். பஞ்சாப், அசாம், மேற்குவங்காளம் போன்ற இதர மாநிலங்களில் இருந்தும் சில நிகழ்ச்சிகளை இணைத்து, நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

சென்னை தீவுத்திடலில் வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியன்று 170 கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு திருவிழா

இதையடுத்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சங்கமம் நிகழ்வுகள் தீவுத்திடலில் 13-ந்தேதி தொடங்கும். 14-ந்தேதியில் இருந்து சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் என கிட்டத்தட்ட 16 இடங்களில் மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கலைநிகழ்ச்சிகளோடு சேர்த்து, சென்னைக்கு பழக்கம் இல்லாத பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பாரம்பரிய உணவுகளை கொண்டு வந்து உணவு திருவிழா நடத்த இருக்கிறோம். முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கும் அடுத்த நாளும், தொடர் நிகழ்ச்சியாக நடைபெறும்.

அந்த நிகழ்ச்சிக்கு இசை கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான அடிப்படை இசையை உருவாக்கி தருவது திரைப்பட இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அவருடைய குழுவினர் எங்களோடு இணைந்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தருவார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பாரம்பரிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். சென்னை சங்கமம் முன்பு நடந்தது போன்று நடைபெறும். இளைஞர்கள் புதிதாக நடத்தும் நிகழ்வுகள், கர்நாடக சங்கீதத்தில் இருக்கக்கூடிய சில பேர் சில பூங்காக்களில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். ஒட்டுமொத்தமாக 700-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு...

சென்னை சங்கமம் நிகழ்ச்சி முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்டது.அதற்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

ஆலோசனை கூட்டம்

இதற்கிடையே சென்னை சங்கமம் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி எம்.பி., தலைமைச்செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, சென்னை சர்வதேச புத்தக திருவிழா தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் நடைபெற உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தீவுத்திடல், கொளத்தூர் பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதேபோல, தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம் பெற உள்ளன. மேலும், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.


Next Story