செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை - அமைச்சர் மெய்யநாதன்


செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை - அமைச்சர் மெய்யநாதன்
x

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகை போட்டிகள் இன்று தொடங்கியது.

சென்னை,

உலகின் மிகப்பெரிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் செஸ் ஒலிம்பியாட் ஆகும். அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்த ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அதற்கான பணிகள் முடிவைத்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இத்தொடருக்கான ஒத்திகைப்போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் மெய்யநாதன் இந்த ஒத்திகைப்போட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

போட்டிகளை தொடங்கி வைத்த பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஒத்திகைப்போட்டி இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு ஒத்திகைப்போட்டி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. 4 ஆண்டுகளில் செய்யவேண்டிய செஸ் ஒலிம்பியாட் பணிகளுக்கான அனைத்து பணிகளையும் 4 மாதங்களில் முடித்து போட்டி நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே இன்று 100 சதவீத பணிகள் முடிந்துள்ளது இதன் அத்தனை பெருமையும் முதல்-அமைச்சரையே சேரும்.

வரும் 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ஒத்திகை போட்டி நோபல் உலக சாதனையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இங்கு களத்திற்கு வந்துள்ளனர். இப்போட்டியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்தியாவில் உள்ள செஸ் போட்டி நடுவர்கள் 'தங்கள் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேறியுள்ளது. அதற்கு ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு என்று கூறியபோதும் சரி' செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் கிராமம் வரை இந்த அறிவுசார்ந்த போட்டியை கொண்டு செல்லும் பணியை முதல்-அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார். எதிர்காலத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் ஒரு செஸ் போர்டு வைத்து குடும்பத்துடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாட வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு நடந்த 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஒலிம்பிக் தீபம் ஏற்றியதே கிடையாது. கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகாக ஒலிம்பிக் தீபத்தை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அந்த தீபம் நாட்டில் உள்ள 75 நகரங்களுக்கு சென்று 27-ம் தேதி மாமல்லபுரத்திற்கு வர உள்ளது' என்றார்.


Next Story