தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரையே சட்டசபையில் ஓடவைத்தார்


தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரையே சட்டசபையில் ஓடவைத்தார்
x

தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கவர்னரையே ஓட வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை

தென் சென்னை தி.மு.க. சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11 பகுதிகள் மற்றும் 2 ஒன்றிய அளவில் கடந்த ஒரு மாத காலமாக 3 ஆயிரம் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற வேளச்சேரி மேற்கு பகுதியை சேர்ந்த மன்சூர் பாய்ஸ் அணியினருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், 2-வது இடம் பிடித்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியை சேர்ந்த எஸ்.வி.ஆர்.செலக்ட் அணிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கி கவுரவித்தார்.

இதே போன்று, பகுதி மற்றும் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே தலா ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைகளையும் வழங்கினார்.

விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென் சென்னை தி.மு.க. சார்பில் வெள்ளியால் ஆன 32 அங்குலம் நீள கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இது தவிர, போட்டியில் பங்கேற்ற 3 ஆயிரம் கிரிக்கெட் அணிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட பேட்டுடன் கூடிய கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

விளையாட்டின் மீதும், உடற்பயிற்சியின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் உடல் புத்துணர்ச்சியோடு, நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் அணி சார்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. அதிலும் தென்சென்னை மாவட்டத்தில் இருந்து தான் அதிக அணிகள் பங்கேற்றன. இங்கு ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரர்களாக மட்டும் அல்லாமல் ஆக்கி, கபடி, சிலம்பம் என உங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் பங்கு கொள்ளுங்கள். விளையாட்டு போதை பழக்கம் உள்ளிட்ட எந்த தவறான பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் உங்களை நல்வழிப்படுத்தும்.

உங்களுக்காக உழைக்க நமது தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எப்போதும் தயாராக உள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்களை சிறுவயதிலேயே அடையானம் கண்டு அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து உணவு, தங்கும் இடம் வழங்கி அவர்களின் திறமையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதால் தான் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாடு சட்டசபையில் வரலாற்றில் இல்லாத நிகழ்வை நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) சமாளித்து இருக்கிறார். பொதுவாக தலைவர் தமது பதில்கள் மற்றும் அறிவிப்புகளின் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களைத்தான் ஓட விடுவார். இன்று (நேற்று) நமது கவர்னரையே ஓட வைத்தார் நமது தலைவர். அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் தினமும் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து, அதே நேரத்தில் நமது உரிமைகள் பறிபோனால் அதற்கு குரல் கொடுக்கும் இந்தியாவிலேயே முதன்மையான முதல்- அமைச்சராக திகழ்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் டாக்டர் பி.அசோக் சிகாமணி, அமைச்சர் மூர்த்தி, தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தி.மு.க. வர்த்தகரணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story