தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம் ..!! - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 24 Dec 2022 6:30 PM GMT (Updated: 25 Dec 2022 1:47 AM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது.

தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றுள்ளனர். கிறிஸ்துமசையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின்னொலியில் ஜொலித்து வருகின்றன.

சென்னை, புதுச்சேரி, மதுரை, வேளாங்கண்ணி, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, நாகை, கோவை போன்ற நகரங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Next Story