முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் கோவை வருகிறார். நாளை நடக்கும் விழாவில் அவர் பங்கேற்று 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இன்று கோவை வருகை
கோவையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்படுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். தொடர்ந்து அவர், நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவையை அடுத்த ஈச்சனாரியில் அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 1 லட்சத்து 7ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
பலர் இணைகிறார்கள்
அதன் பிறகு கார் மூலம் பொள்ளாச்சிக்கு செல்லும் அவர், மாலை 5 மணிக்கு ஆச்சிப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் பங்கேற்கிறார். இதில் ஏராளமானோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கிறார்கள்.
தொடர்ந்து அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு திருப்பூருக்கு சென்று அங்கு ஓய்வு எடுக்கிறார். 25-ந் தேதி திருப்பூரில் காலை 10 மணிக்கு நடைபெறும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிவிட்டு, மதியம் ஈரோடு மாவட்டம் கோபிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு கள்ளிப்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவு 7.30 மணிக்கு ஈரோட்டுக்கு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பின்னர் 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை வந்தடைகிறார். தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கும் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு 8.35 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை செல்கிறார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்புக்காக போலீசார் இன்று காலையில் கோவைக்கு வர உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கோவை ஈச்சனாரி அருகே விழா நடக்கும் மேடையை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.