கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் பக்கீரான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், தேன்மொழி, ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். இஸ்ரேலை ஆதரிக்கும் மத்திய அரசை கண்டித்தும், போருக்கு ஆதரவாக செயல்பட்டு, ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்காவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, கண்ணன், பால்கி, சுகுமாறன், வைத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.