குட்டியுடன் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானை: 2 பேர் காயம்
குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டுயானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் உடைத்து வருவதால், அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவை அருகே தாழியூர் பகுதிக்குள் குட்டியுடன் காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து விவசாயி நடராஜன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்தது. அங்கு பொருட்களை சேதப்படுத்தியதோடு, விளைநிலத்தில் இருந்து அறுவடை செய்து வைத்திருந்த காய்கறிகளையும் தின்றது.
சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டு வளாகத்தில் குட்டியுடன் காட்டுயானை நிற்பதை பார்த்து பீதி அடைந்தனர். உடனே அவர்கள் வெளியே வராமல் பாதுகாப்பான இடத்துக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.
ஆனாலும், வீட்டின் முன்பக்க கதவை யானைகள் உடைத்தன. அப்போது அவரது வீட்டில் தங்கியிருந்த விவசாய கூலி தொழிலாளர்கள் பழனிசாமி, ருக்மணி ஆகியோர் மீது இடிபாடுகள் விழுந்தன. இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் சென்றன. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், அந்த பகுதியில் குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டுயானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவை இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைந்து வருகின்றன. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.